ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் விமர்சனம் Movie Review

Oru Nalla Naal Paathu Sollran Review

அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் நடித்திருக்கும் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. விஜய்சேதுபதியின் பல கெட்அப்களையும் தாண்டி இந்தப்படத்தில் வேறென்ன சுவாரஸ்யங்கள் இருக்கின்றன? அதற்கு ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது?
கதைக்களம்
எமனை குலதெய்வமாக வழிபடும் காட்டுவாசி கூட்டம் ஒன்று ஆந்திராவின் மலைப்பகுதி ஒன்றில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வசித்து வருகிறது. இந்த குரூப்பின் தலைவி விஜியின் மகன்தான் விஜய்சேதுபதி. இவர்களின் குலத்தொழிலே திருடுவது மட்டுமே. ஒவ்வொருமுறையும் சிட்டிக்குச் சென்று யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல் நகை, பணங்களை கொள்ளையடித்துவிட்டு தங்களின் இருப்பிடத்திற்குத் திரும்புவது இவர்களின் வழக்கம். அப்படியொரு முறை சென்னைக்குத் திருடச்செல்லும்போது, அங்கே கௌதம் கார்த்திக்கின் காதலி நிஹாரிகாவைப் பார்க்கிறார் விஜய்சேதுபதி. அவரைப் பார்த்தவுடனே, ‘இவளுக்காகத்தான் நான் 14 வருடமாக காத்திருந்தேன். இவளே என் மனைவி’ எனச் சொல்லி நிஹாரிகாவை தன் இருப்பிடத்திற்கு கடத்திச் செல்கிறார் விஜய்சேதுபதி. நிஹாரிகாவைத் தேடி கௌதம் கார்த்திக்கும் அவரின் நண்பன் டேனியலும் ஆந்திர மலைப்பகுதிக்குச் செல்கின்றனர்.
விஜய்சேதுபதி நிஹாரிகாவை எதற்காக தன் மனைவி என்கிறார்? அவருக்கும் நிஹாரிகாவுக்கும் என்ன உறவு? தன் காதலியைத் தேடிச் சென்ற கௌதம் கார்த்திக்கின் கதி என்னாவகிறது? என பல கேள்விகளுக்கு விடைசொல்கிறது ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படம்.
படம் பற்றிய அலசல்
இந்தப் படத்திற்குச் செல்லும்முன், ரசிகர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாகிக்கொள்ள வேண்டியது அவசியம். இதுவொரு வித்தியாசமான ஃபேன்டஸி பிளாக் காமெடி ஜேனர் முயற்சி. எனவே, இப்படத்தில் ஒரு அழுத்தமான கதையையோ, லாஜிக்கலான விஷயங்களையோ, அல்லது உணர்ச்சிப்பூர்வமான விஜய்சேதுபதியின் நடிப்பையோ எதிர்பார்த்துச் செல்ல வேண்டாம். அதேபோல், விஜய்சேதுபதியின் கெட்அப்பிற்குப் பின்னணியிலும் பெரிய காரணங்கள் எல்லாம் எதுவும் இல்லை. இது எல்லாவற்றையும் மறந்துவிட்டு எந்த எதிர்பார்ப்பில்லாமலும் சென்றால் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படத்தின் சின்னச்சின்ன டைமிங் காமெடிகளை £க ரசித்துவிட்டு வரலாம்.
குறிப்பாக படத்தின் முதல்பாதி சுவாரஸ்யமாகவே கடக்கிறது. ஆனால், இரண்டாம்பாதி முழுக்க முழுக்க ஒரே இடத்திலேயே நகர்ந்து கொண்டிருப்பதாலும், ஒவ்வொரு காட்சியையும் இழுத்தடித்திருப்பாலும் சிற்சில இடங்களில் நம்மையும் அறியாமல் சோர்வடைய வைக்கிறது. அதையும் தாண்டி படத்தை போரடிக்காமல் நகர்த்துவதற்கு பெரிய உதவியாய் இருக்கிறது விஜய்சேதுபதி, ரமேஷ் திலக், ராஜ்குமார், டேனியல் ஆகியோரின் காமெடிக் காட்சிகள்.
நடிகர்களின் பங்களிப்பு
விஜய்சேதுபதியைப் பொறுத்தவரை எந்த கேரக்டரைக் கொடுத்தாலும் அதை சிறப்பாகச் செய்துவிடுவதில் வித்தகர். இந்தப்படத்திலும் அப்படியே. க்ளைமேக்ஸ் நெருங்கும்வேளையில், கௌதம் கார்த்திக்கிடம் மூச்சுவிடாமல் விஜய்சேதுபதி தொடர்ச்சியாகப் பேசும் வசனம் ஒன்றிற்கு தியேட்டரில் செம க்ளாப்ஸ். காலேஜ் பாய் கேரக்டருக்கு கத்திதமாகப் பொருந்தியிருக்கிறார் கௌதம் கார்த்திக். அவரின் முந்தைய படங்களைவிட இப்படத்தில் அவரின் காமெடி சென்ஸ் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. இரண்டு ஹீரோயின்களில் காயத்ரியை விட நிஹாரிகாவுக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு அதிகம் வழங்கப்பட்டிருக்கிறது. தெலுங்கிலிருந்து தன்னை தமிழுக்கு அழைத்து வந்ததற்கு நியாயம் கற்பித்திருக்கிறார் நிஹாரிகா. டேனியல், ரமேஷ் திலக், ராஜ்குமார் மூவருமே படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறார்கள். குறிப்பாக, டேனியலின் காமெடி ‘இ.தா.ஆ.பா’ படத்திற்குப் பிறகு பெரிதாக ஒர்க்அவுட்டாகியிருக்கிறது.

பலம்
1. படத்தின் முதல்பாதி

2. விஜய்சேதுபதி, டேனியல் அன்கோவின் காமெடிக் காட்சிகள்

பலவீனம்
1. கதை

2. இரண்டாம்பாதி படத்தின் நீளம்

மொத்தத்தில்...
ஒரு குறிப்பிட்ட காட்டுவாசி இனம், அவர்களுக்கென்று ஒரு தனி கலாச்சாரம்... அந்தக்கூட்டத்தில் மாட்டிக்கொள்ளும் இன்றைய டெக்னாலஜி யுக காதல் ஜோடி இவர்களை வைத்துக்கொண்டு ‘பிளாக் காமெடி’ ஸ்டைலில் வித்தியாசமான படமொன்றை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார். அவரின் முயற்சிக்கு ஆங்காங்கே பலன் கிடைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Verdict : காமெடிக்கு கியாரண்டி!

Tags : oru nalla naal paathu solren, oru nalla naal paathu solren teaser, oru nalla naal paathu solren trailer, oru nalla naal paathu solren first look, oru nalla naal paathu solren motion poster, oru nalla naal paathu solren movie, oru nalla naal paathu solren tamil movi