தீவிரவாதியை பிடிப்பது போல் என்னை கைது செய்தனர்: மன்சூர் அலிகான் ஆவேச பேட்டி India News

mansoor ali khan says They arrested me as a terrorist

8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல் பிடித்து கைது செய்தனர் என்று மன்சூர் அலிகார் ஆவேசமாக தெரிவித்துள்ளார். #mansooralikhan #chennaisalemgreenexpressway

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் கடந்த மே மாதம் நடிகர் மன்சூர் அலிகான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது 8 வழிச்சாலை அமைத்தால் 8 பேரையாவது வெட்டுவேன் என கூறினார்.

இது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் மன்சூர் அலிகானை சென்னையில் வைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர் சேலத்திற்கு அழைத்து வரப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று முன்தினம் சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து சேலம் மத்திய சிறையில் இருந்து மன்சூர் அலிகான் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டார். ஜெயில் வாசல் முன்பு அவருக்கு நாம் தமிழர் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது மன்சூர் அலிகான் நிருபர்களிடம் கூறியதாவது:-

8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனக்காக சட்டமன்றத்தில் பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சினிமாவில் நடித்தபோது அட்டைக் கத்தியை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், இங்கு சிறையில் 70, 80 வயதுடையவர்கள் எல்லாம் ஆத்திரத்தில் மனைவியை கொன்று விட்டேன் என்றெல்லாம் வந்திருக்கிறார்கள்.

தற்போது 40 சதவீத கமி‌ஷனுக்காகவே இந்த 8 வழிச்சாலையை அமைக்கிறார்கள். 8 வழிச்சாலையால் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கிறேன் என்றோ அல்லது எத்தகைய பசுமை புரட்சியை ஏற்படுத்த போகிறோம் என்றோ எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.

சேலத்தில் இருந்து சென்னைக்கு ஏற்கனவே 3 சாலைகள் இருக்கும்போதும் 4-வது சாலை எதற்காக அமைக்கிறார்கள்?. நான் கைது செய்யப்பட்ட அன்று, காலையில் ரத்ததானம் செய்யலாம் என புறப்பட்டேன். ஆனால், அன்றைய தினம் ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல் பிடித்து என்னை கைது செய்தார்கள். வைரமுத்து தலையை வெட்டி கொண்டு வாருங்கள் எனக் கூறியவர்களை எல்லாம் கைது செய்யவில்லை. மன்சூர் அலிகான் இளிச்சவாயன் என்பதால் கைது செய்து விட்டார்கள்.

நடிப்பை தவிர எனக்கு வேறு வழியில்லை. அது மட்டுமே வருமானம். மாணவி வளர்மதி மிகப்பெரிய சக்தி எனக்கருதி அவரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த ஜனநாயக நாட்டில் கருத்துரிமை, பேச்சுரிமை இல்லாமல் போகிறது. நியாயத்தை பேசினால் வாய்ப்பூட்டு போட்டு கைது செய்கிறார்கள். பச்சை பச்சையாக பேசுபவர்களை எல்லாம் கைது செய்யாமல் சுதந்திரமாக சுற்ற விட்டிருக்கிறார்கள்.

8 வழிச்சாலை அமைத்தால் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என கூறினால் நாம் தமிழர் கட்சி சார்பில் கல், மண் சுமந்து சாலை அமைக்க உதவுகிறோம். அடக்கு முறையால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் ஆவேசமாக கூறினார்.

பின்னர் அவர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். #mansooralikhan #chennaisalemgreenexpressway

Tags : mansoor ali khan, chennai salem green express way, சேலம் சென்னை பசுமைச் வழி சாலை, மன்சூர் அலிகார் , தமிழக அரசு