திவால் ஆனது வாவ் ஏர்லைன்ஸ்- ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு World News

Thousands of people in Iceland lose their jobs in connection to WOW air bankruptcy

ஐஸ்லாந்தின் வாவ் ஏர்லைன்ஸ் நிறுவனம் கடனை செலுத்த முடியாமல் திவால் ஆனதால், பலர் வேலையிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உள்ளது. #WOWairBankruptcy #Iceland

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கி வரும் ஐஸ்லாந்தின் வாவ் ஏர்லைன்ஸ் நிறுவனம், தற்போது கடும் கடன் சுமையில் உள்ளது. இந்த நிறுவனத்தின் 7 விமானங்களை ஏஎல்சி நிறுவனம் குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்தது. குத்தகைக் காலம் முடிவடைந்ததையடுத்து, ஏஎல்சி நிறுவனத்திற்கு வாவ் ஏர்லைன்ஸ் செலுத்த வேண்டிய 200 மில்லியன் ஐஸ்லாந்திய குரோனா (ஐஸ்லாந்து கரன்சி) தொகையை செலுத்த முடியவில்லை. 
 நிறுவனத்தை சரிவில் இருந்து மீட்டெடுக்க அதன் இயக்குனர்கள் பல மாதங்களாக தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் பணத்தை அவர்களால் திரட்ட முடியவில்லை. பணத்தை செலுத்துவதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் இரவுடன் முடிவடைந்த நிலையில், வாவ் ஏர்லைன்ஸ் திவால் ஆனது. 

இதனையடுத்து அந்த விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அமெரிக்கா மற்றும் கனடாவில் தரையிறக்கப்பட்டன. இதனால் ஐஸ்லாந்திலும், வெளிநாடுகளிலும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.  விமான நிலையங்களில் பரபரப்பான சூழல் நிலவியது. பயணிகளுக்கு மாற்று விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

விமானங்கள் தரையிறக்கப்பட்டதால், ஐஸ்லாந்தில் வாவ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 1000 தொழிலாளர்கள் மற்றும் விமான தொழில் மற்றும் போக்குவரத்து சேவை தொடர்புடைய பணி செய்வோர் என சுமார் 3 ஆயிரம் பேர் வேலையை இழக்க உள்ளனர். ஐஸ்லாந்தில் இதற்கு முன்பு ஒரே நாளில் இப்படி ஏராளமானோர் வேலையிழந்ததில்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும்பட்சத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என வங்கி நிபுணர்கள் கூறியுள்ளனர். #WOWairBankruptcy #Iceland

Tags : WOW airlines, plane service, வாவ் ஏர்லைன்ஸ், விமான சேவை, தொழிலாளர்கள் வேலையிழப்பு